Sunday 13 March 2011

உலகின் எட்டாவது அதிசயம்

வெலிங்டன்: 19-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகின் எட்டாவது அதிசயமாக கருதப்பட்ட நியூசிலாந்து நாட்டின் சுற்றுலா மையமொன்று மிகப்பெரிய எரிமலை வெடிப்பின் காரணமாக பூமியில் புதைந்தது. அந்த எட்டாவது அதிசயம் 125 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து ஏரிக்கு கீழே அமெரிக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள், அவர்களது ஆராய்ச்சியின் போது நியூசிலாந்து நாட்டின் ரொடொமொஹானா ஏரியில் 60 மீட்டருக்கு கீழே வெள்ளை நிற மேற்கூரைகளும், இளஞ்சிவப்பு நிற அமைப்புகளும் தென்பட்டதாக கூறியுள்ளனர்.

அக்காலத்தில் அந்த கட்டிடங்கள் விசிறிமடிப்பு போன்ற மாடி படிக்கட்டுகளோடு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற மேற்கூரைகளோடு ஒரு பெரிய திருமண கேக்கு போல் வடிவமைக்கப் பட்டிருந்தனவாம். 1886-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி அருகாமையில் இருந்த மவுண்ட் டரவேரா எரிமலை வெடித்துச் சிதறியதில் புதையுண்டதாம் அந்த புகழ்பெற்ற நியூசிலாந்து நாட்டின் சுற்றுலா ஸ்தலம்.  1,111, மீட்டர் உயரத்துடன் விளங்கிய மலையானது ஐந்து மணி நேர கொந்தளிப்பில் இரண்டாகப் பிளந்து, அதன் விளைவாக எழுந்த சிதறல்கள் ஆயிரக்கணக்கான சதுர மைல்களை சென்றடைந்தனவாம். அந்த சம்பவத்தில் மூன்று கிராமங்கள் புதையுண்டன, 153 பேர் மாண்டனர். அப்போது 10 கிமீ உயரத்திற்கு புகைமண்டலம் பரவியதாம்.

மாவுரி மொழியில் வெப்ப ஏரி என அழைக்கபட்ட ரொடொமஹானா ஏரியே அந்த எரிமலை வெடிப்பில் வறண்டு ஒன்றுமில்லாமல்  போனது.  ஆனால் ஏரியின் கரையிலிருந்து கொப்பளித்து பாய்ந்த வெப்ப நீர் ஊற்றுகளால் அந்த ஏரி மேலும் பன்மடங்கு பெரிதானது. 

அமெரிக்காவின் மாஸச்சூட் பகுதியின் 'கேப் காட்' டிலுள்ள வுட்ஸ் ஹோல் கடலாராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் 8 சதுர கிமி பரப்பளவுள்ள நியூசிலாந்து ஏரியின் கீழ் இத்தகைய அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.அவர்களது ஆராய்ச்சியில் ஏரியின் நிலப்பரப்பில் ஒன்றிரண்டு மீட்டர் உயரத்திற்கு 70 மீட்டர் நீளத்திற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் புதையுண்ட கட்டிடங்களின் பிம்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி ஜி.என்.எஸ் சயின்ஸ் அமைப்பின் திட்டக்குழு தலைவர் கர்னல் டி ரோண்டெ கூறியதாவது,  " இத்தகைய இளஞ்சிவப்பு நிற கண்டுபிடிப்பின் மூலம் ஒரு நூறாண்டு கால கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. நாங்கள் அந்த அமைப்பை கண்டவுடன் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக சோதனை செய்தோம். அது நியுசிலாந்து ஏரியில் புதையுண்ட அந்த பிங்க் மாளிகையே என்னும் விஷயத்தில் 95 சதம் உறுதியாக உள்ளோம். பெரிய வெள்ளை நிற மாளிகை முகடு எதுவும் தென்படவில்லை. அது எரிமலை கொந்தளிப்பில் அழிந்து போயிருக்கலாம். அவ்வாறு ஒரு மாளிகை உண்மையிலேயே இருந்ததா என்பதே 125 ஆண்டுகளாக மர்மமாக் இருந்த சூழ்நிலையில் இது ஒரு மிகப்பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்பாகும்." என்று தெரிவித்துள்ளர்.

நியூசிலாந்து ஹெரால்டு பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள சரித்திர ஆராய்ச்சியாளர் மார்கரெட் மக்யூர் "இத்தகைய மேற்கூரைகளும் அவற்றிலிருந்து இறங்கிய வெந்நீர் அருவிகளும்தான் அங்கு அதிசயிக்க விஷயம்.  அந்த ஏரியைக்காண இப்போதும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் குவிகின்றனர்." என்று கூறியுள்ளார். அந்நாட்களில் அல்லாவுதின் குகையென்றும், மாயாலோகமென்றும் மக்கள் கருதினர் என்று தெரியவருகிறது.

ஏரிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த இடங்கள் மின்சார உற்பத்தி நிலையமாக மாற்றப்படலாம் என்று சிலர் கூறினாலும் அந்த பிரதேச மக்களான மாவுரிகளோ அந்த இடம் அவர்களது மூதாதையர்கள் மறைந்த இடம், அவர்களது நினைவிடமாக போற்றப்படவேண்டிய புனிதமான் இடம் என்று கூறுகின்றனர்.

1 comment:

varnaroopam said...

தகவல் மிக அருமை சில புகைபடம் இருந்தா நல்லா இருக்கும்