Monday 14 March 2011

சுனாமி எவ்வாறு ஏற்படுகிறது?

சுனாமி என்பது ஜப்பானிய வார்த்தையாகும். இது இரண்டு எழுத்து வார்த்தையாகும். முதல் எழுத்தான சு- துறைமுகத்தையும் னாமி - என்பது அலையையும் குறிக்கிறது. கடலுக்கு அடியில் தரைப்பகுதிகளில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற கடுமையான தாக்குதலால் கடல் பாதிக்கப்படும் சமயங்களில் மிக ஆக்ரோஷமான கடல் அலைகள் உருவாகின்றன. இது மட்டுமின்றி கடலுக்கு அடியில் தரைப்பகுதிகளில் நிலச்சரிவும் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இத்தகைய நிலச்சரிவுகள் மற்றும் நிலநடுக்கங்கள் போன்றவை பெருமளவில் நிகழும் சமயங்களில் கடல் நீர் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இதன் காரணமாக கடலின் தரைப்பகுதிகளில் இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு அதன் காரணமாக உருவாகும் அலைகள் கரையை நோக்கி கடலுக்கு அடியிலேயே மிக வேகமாக பயணித்து கரையை அடைந்ததும் மோதிச் சிதறுகின்றன. இவ்வாறு சிதறும் போது கரைப்பகுதியில் இருப்பவை அனைத்தையும் அழைத்துச் செல்லுகின்றன. இந்தத் தக்குதலே சுனாமி என்று அழைக்கப்படுகிறது.
சுனாமி அலைகள் பெரும்பாலும் கடலுக்கு அடியில் நிகழும் நிலநடுக்கங்களின் விளைவாகவே உருவாகின்றன. இதுமட்டுமின்றி கடலுக்கு அடியில் இருக்கும் பெரிய பெரிய எரிமலைகள் வெடித்துச் சிதறி கடலை சீற்றமடையச் செய்யும் போதும் சுனாமி அலைகள் உருவாகின்றன. பூகம்பங்கள் 8.0 ரிக்டர் அளவிற்கு மேல் பதிவாகும் போதுமட்டுமே சுனாமி பேரல்கைகள் உருவாகின்றன. சுனாமி பேரலைகளால் நீர் பாதிப்புக்கு ஆளானவுடன் கடற்கரைப் பகுதிகளில் நீரானது சுமார் 100 அடி முதல் 200 அடிகள் வரை உள்ளே இழுக்கப்பட்டு உள்நோக்கிச் செல்லும். பின்னர் இராட்சத அலைகள் உருவாகி கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து சுமார் 10 முதல் 50 அடி உயரம் வரை எழும்பி கரையைத் தாக்கும். இந்தியப் பெருங்கடலில் சுனாமி மிக அரிதாகவே உருவாகும்.
சமீபத்தில் நடந்த சுனாமி, பூமியில் க்ரெஸ்ட் எனப்படும் பகுதியில் நகரக்கூடிய டெக்டானிக் பிளேட் எனப்படும் பாறைப் பலகைகள் உள்ளன. இதில் இரண்டு டெக்டானிக் பிளேட்டுகள் இந்திய பெருங்கடலில் இந்தோனேஷியாவின் தீவான சுமத்ரா தீவின் தென்கிழக்குப் பகுதியில் சுமார் 155 மைல் தொலைவில் தங்கள் வழக்கமான இடத்திலிருந்து நழுவின. இதன் விளைவாக கடலின் தரைப்பகுதியில் பெரும் பாதிப்புகள் நிகழ்ந்து கடல் பெரும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு சுனாமி ஏற்பட்டது. இப்பகுதியில் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 9.0 ஆக பதிவானது. கடந்த நாற்பது ஆண்டுகளில் நிகழ்ந்த நிலநடுக்கங்களில் மிகவும் அதிகப்படியான நிலநடுக்கம் இதுவே ஆகும்.
கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அலைகள் எல்லா திசைகளிலும் பரவ ஆரம்பிக்கின்றன. கடல் பேரலைகள் வட்டமாக எல்லா திசைகளிலும் பயணம் செய்ய ஆரம்பிக்கின்றன. இந்த அலைகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும். இவை கடலுக்கு மேற்புறம் இருந்து பார்த்தால் தெரியாதவாறு கடலுக்கு அடியில் மணிக்கு 500 மைல்கள் வேகத்தில் பயணிக்கும். இவாறு அசுரத்தனமான சக்தி படைத்த அலைகள் கடற்கரைப் பகுதிகளை நெருங்கியதும் மோதி பயங்கரமாக கடற்கரைப் பகுதிகளை ஆக்கிரமித்து அப்பகுதியில் உள்ளவற்றை அழிக்கின்றன. சுனாமி அலைகள் சுமார் 50 அடி உயரம் வரை எழும்பி கடற்கரையைக் ஒட்டியுள்ள நிலப்பரப்பில் சுமார் ஒருமைல் தொலைவு வரை கடல் நீரை வீசி அடிக்கும் அசுர சக்தி படைத்தவை.

No comments: